26 ஜனவரி 2020 கிராம சபை கூட்ட பதிவு எங்கே - ஏன் இந்த தாமதம்?

30 ஏப்ரல் 2020

வணக்கம்.

கடந்த கிராம சபை கூட்டம் முடிவடைந்து 3 மாதங்கள் ஆன நிலையில், அதன் விவரங்கள் பதிவிடப்படாதது ஏன் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் இருக்கக்கூடும். அதன் காரணங்களை பகிரும் முன் கடந்த கிராம சபை கூட்டத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த கிராம சபை கூட்டத்திற்கு முன்னதாக நமது எதிர்பார்ப்புகளை ஒரு வலைப்பதிவின் மூலம் தெரிவித்திருந்தோம். அதனை மதிக்கும்பொருட்டு,

  1. வரவு-செலவு விவரங்களில் ஆரம்ப இருப்பு மற்றும் முடிவிருப்பு தொகை குறிப்பிடப்பட்டது.
  2. வணிக வளாகம் வாடகை பட்டியல் வெளியிடப்பட்டது.

வணிக வளாகம் வாடகை பட்டியல்26 ஜனவரி 2020 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட வணிக வளாகம் வாடகை பட்டியல்.

இவ்விரண்டிற்காகவும் ஊராட்சி அலுவலகத்திற்கு கிராம மக்களில் ஒருவனாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம், 26 ஜனவரி 2020 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தின் குறிப்புகள் என்னிடத்தில் பகிர படாதது சற்று வேதனை அளிக்கிறது. இருப்பினும், அந்த விவரங்கள் பொது களத்தில் இருப்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் விவரங்கள் கீழ் வருமாறு.

  • 12 பிப்ரவரி 2020 - மனு தாக்கல் செய்யப்பட்ட நாள்.
  • 19 பிப்ரவரி 2020 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது. இணைப்பை பார்க்கவும்.
  • 18 மார்ச் 2020 - உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவகத்திலிருந்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் செலுத்தவேண்டிய தொகை பற்றிய விவரங்கள் அனுப்பப்பட்டது. இணைப்பை பார்க்கவும்.
  • 24 மார்ச் 2020 - மேற்கூறப்பட்ட கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்ற நாள்.

25 மார்ச் 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டதால் செலுத்தவேண்டிய தொகைக்கான வரைவோலை எடுப்பதிலும் அதனை தபால் மூலம் அனுப்புவதிலும் பெருமளவு தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், நமக்கு கிடைக்க வேண்டிய தகல்வல்கள் துரிதமாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அது வரை, அனைவரும் வீட்டிலிருந்த படி, அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் சென்று சமூக விலகலை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வரும் முன் காப்போம்.