26 ஜனவரி 2020 கிராம சபை கூட்டம் - எதிர்பார்ப்புகள்

21 ஜனவரி 2020

வணக்கம்.

வரும் 26 ஜனவரி 2020, குடியரசு தினமன்று மானாம்பதி ஊராட்சியில் நடக்கவிருக்கும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அல்லது தெளிவு படுத்த வேண்டிய அம்சங்களின் தொகுப்பு கீழ்வருமாறு.

வரவு-செலவு விவரம்

ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் ஊராட்சி அலுவலகத்தின் வரவு மற்றும் செலவு பற்றிய விவரங்கள் வாசிக்கப்பட வேண்டும். கடந்த வருடம் 2019 அக்டோபர் 2 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆரம்ப இருப்பு, வரவு, முடிவிருப்பு ஆகியவற்றை பற்றிய விவரங்கள் இடம் பெறவில்லை. செலவுகள் மட்டுமே குறிப்பிட பட்டுள்ளன.

இனி வரும் கிராம சபை கூட்டங்களில் ஆரம்ப இருப்பு, வருவாய், செலவு மற்றும் முடிவிருப்பு ஆகிய அனைத்தும் இடம் பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வணிக வளாகம் வாடகை பட்டியல்

ஊராட்சியில் அமைந்துள்ள காமராஜர் வணிக வளாகத்தின் வாடகை பட்டியலை வெளியிடுமாறு 2019 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊரார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, 2019 அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை. அக்டோபர் 2-ஆம் தேதி மாலை 4 மணியளவில் வெளியிடப்படும் என்று கிராம சபையில் கூறப்பட்டது. ஆனால், இன்று வரை பொது மக்களுக்காக வெளியிடப்படவில்லை.

ஆகையினால், வரவிருக்கும் கிராமசபை கூட்டத்திற்கு முன்னதாக வணிக வளாகம் வாடகை பட்டியலை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

கிராம சபை தீர்மானங்களின் நிலை

2019 அக்டோபர் 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. நூறு நாள் வேலைத்திட்டங்களிலும் சீரமைப்பு பணிகளிலும் காணப்படும் செயலாற்றல் கிராம சபை தீர்மானங்களை செயல்படுத்துவதில் காண முடியவில்லை. இது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

காண்க - https://manampathy.com/grama-sabha/2019-10-02

இனி வரும் காலங்களில், தீர்மானங்களின் நிலை குறித்து ஊராட்சி அலுவலகம் மாதம் ஒருமுறை அறிவிப்பு பலகையில் அறிக்கை வெளியிட வேண்டுகிறோம்.

புகார்கள்

கிராமத்தார் ஊராட்சி அலுவகத்திற்கு புகாரளிக்க ஏதுவாக இணையதளத்தில் புகார் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களை காண - https://manampathy.com/complaints/

தேவைகள்

 1. ஊர் முழுவதும் வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்தல்.
 2. பொது இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்தல்.
 3. நில ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.

ஊர் முழுவதும் வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்தல்.

ஊரில் சில வீடுகளில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி இல்லை. அதனால், கழிவுநீர் நேரே வெள்ள நீர் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் சேரும் படி இணைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கால்வாய்கள் மணல் மூடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாது, திறந்த நிலையில் இருக்கும் சில கால்வாய்கள் குப்பைகள் கொட்டப்பட்டு நீரோட்டமின்றி அடைபட்டு கிடக்கின்றன. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் வழிந்து, சாலையில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்படுகிறது.

sannathi-street-drainage-overflowசன்னதி தெருவில் அடைபட்ட கால்வாயிலிருந்து வழிந்து தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்.

sannathi-street-drainage-blockedதிறந்த நிலையில் இருக்கும் கால்வாயில் கொட்டப்பட்ட குப்பைகள் நீரோட்டத்தை தடுக்கின்றன.

அவ்வப்போது தூர் வாருவது இதற்கான தற்காலிக நிவாரணமாக இருக்குமே அன்றி நிரந்தர தீர்வாக அமையாது. இதற்கு சரியான தீர்வு காணும் வகையில்,

 1. ஊர் முழுவதும் அடைக்கப்பட்ட கால்வாய்களை கண்டறிய ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை ஊராருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
 2. அடைக்கப்பட்ட கால்வாய்களை மீட்டெடுக்க மட்டுமில்லாமல், மீண்டும் அடைக்கப்படாமல் பார்த்துக்கொள்ள இந்த ஆய்வின் அறிக்கை உதவும்.
 3. ஊர் முழுவதும் கால்வாய்கள் திறந்த நிலையில் அல்லாமல் மூடி வைக்கப்பட வேண்டும். இது குப்பைகள் சேருவதை தவிர்க்கவும், கொசு உற்பத்தியாவதை தடுக்கவும் உதவும்.
 4. மூடப்பட்ட கால்வாய்களில் பத்து அல்லது இருபது அடிக்கு ஒரு மூடியுடன் கூடிய துளை அமைக்க வேண்டும். இது பின்னாளில் தூர் வார உதவியாய் இருக்கும்.

பொது இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்தல்.

நமது ஊரில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக, எல்லா பேருந்து நிலையங்களிலும், ஊராட்சி அலுவலகத்திற்கு வெளியிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா ஒரு குப்பைத்தொட்டி அமைக்கப்பட வேண்டும்.

 1. குப்பை தொட்டிகள் சிறிய அளவுடையதாகவும், எளிதில் அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும். இல்லையேல், குழந்தைகள் பூங்காவில் உள்ள இருக்கைகள் போல் இங்கும் அங்குமாக தள்ளப்படும்.
 2. குப்பைத்தொட்டியின் உட்புறத்தில் பிளாஸ்டிக் பைகள் வைத்து அதனுள் குப்பைகள் விழும்படி செய்ய வேண்டும். இது, தினந்தோறும் குப்பைகளை அகற்ற எளிதாகவும், குப்பை தொட்டிகளில் துர்நாற்றம் வீசாமல் வைத்துக்கொள்ளவும் உதவும்.
 3. தினந்தோறும் தொட்டிகளிலிருந்து குப்பைகளை அகற்ற ஊராட்சி அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நில ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.

ஊரின் பல்வேறு இடங்களில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சோழியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரி மற்றும் மாந்தோப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை பற்றி முன்னரே சுட்டிக்காட்ட பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இவற்றை சரி செய்யும் விதமாக,

 1. ஊர் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு, அதன் விவரங்களை பொது மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். ஊராட்சி அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடுதல் நல்லது.
 2. ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாதந்தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்தும் வரும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.